
தோல்வியின் புதைகுழியில்
வெற்றிப் புதையல்!
தோண்டும் போதே
துவண்டு விடுவதா… வாழ்க்கை?
கனவு மயக்கத்தில் கனியப் போவது
சாதனைச் செடியின் துவக்கம்!
விழித்துக் கொள்ளாமல்
சலித்துக் கொள்வதா.. வாழ்க்கை?
சிதறும் மத்தாப்பில் சிரிக்கும்
சின்னஞ் சிறார்களின் உழைப்பு!
வியந்து சிலிர்த்து
வியர்வை நுகராமல்
அயர்ந்து போவதா… வாழ்க்கை?
அணியின் முதுகில்
அணிந்திருப்பது
காவத்தின் ரேகை!
அணியத் துடிக்காமல்
துணிந்து முயலாமல்
பணிந்து கிடப்பதா.. வாழ்க்கை?
மலரின் வாடலில் கனியின் துவக்கம்!
கனியின் சிதை(யி)வில் விதையின் ஜனனம்!
கிளர்ந்து துளிர்க்காமல்
தளர்ந்து தவிக்கவா.. வாழ்க்கை?
முயற்சியின் வழியினை
நம்பும் கைகளே
நம்பிக்கைகள்!
முயற்சி மறந்து
பயந்து வாழ்ந்து
நைந்து போவதா.. வாழ்க்கை?
காலச் சுவடுகளாய்
காலின் சுவடுகளை
மாற்றிட முயலாமல்
பாத பூஜைகளில்
பாதை மறப்பதா… வாழ்க்கை?
தோல்வியின் முதுகில்
வெற்றி(ப்)யின் பயணம்!
வாழ்வின் வலியை உணர்ந்து பாராமல்
வென்றெடுப்பதா… வெற்றி?
- கவிஞர் சின்னை இராமவாசன்
No comments:
Post a Comment