Wednesday, April 11, 2012

கலியுக நண்பன்...

சரக்கடிக்கும் போது சொன்னான்
நண்பன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று....

நண்பனாய் இருக்க வேண்டிய நேரத்தில் சொன்னான்
" எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு மச்சி"....

ஒரு "மாதிரி" யாய் ஒரு வாழ்க்கை...

அப்பா மகனிடம் சொன்னார்
மகனே! நீ அப்துல்கலாம் மாதிரி பெரிய விஞ்ஞானி ஆகவேண்டும் என்று..!

அம்மா மகளிடம் சொன்னார்
மகளே! நீ கல்பனா சாவ்லா மாதிரி விண்ணில் பறக்க வேண்டும் என்று..!

தங்கை அண்ணனிடம் சொன்னாள்
அண்ணா! நீ சச்சின் மாதிரி பெரிய கிரிக்கெட்டராய் வர வேண்டும் என்று..!

ஆகமொத்தம் யாருமே ஒரு நல்ல மனிதனாய் இருக்க சொல்ல மறந்ததன் விளைவோ..!!?
எல்லோரும் ஒரு "மாதிரி"யாகவே சுற்றுகிறார்களோ....?!!!!!!!

Tuesday, April 10, 2012

மனிதா நீ எப்பொழுது மனிதனாய் வாழ்வாய்....?

துன்பத்தில் நியாயம் நேர்மை என புலம்பும் மனிதா...!
வசதியாய் வாய்ப்புகள் அமையும்பொழுது
அவைகளை வசதியாய் மறந்துவிடுவது ஏனோ..!

ஏழ்மையில் சமுதாயத்தை சாடும் நீ...!
பணம் வந்ததும் ஏழ்மை சமுதாயம்
உனக்கு ஏளனமாய் தெரிவதுதான் ஏனோ..!
நீ இனம் மாறும் மாயைதான் என்னவோ..!

பதவிகளை பற்றி பாடங்கள் நடத்தும் நீ...!
பதவி வந்ததும் பாடங்களை மறந்து
புகழை நோக்கி ஓடும் மயக்கம்தான் ஏனோ..!
பதவிகள் பெற நீ படும்பாடுகள் என்ன..?
புகழைப் பெற நீ செய்யும் வேலைகள்தான் என்னென்ன..?
குழி பறிக்கும் தந்திரங்கள்தான் என்னென்ன...?

ஓ மனிதா...!!! சிறந்த மனிதர்களால் மட்டுமே பதவிகள் சிறக்கின்றனவே தவிர
பதவிகளால் ஒருவன் சிறந்த மனிதனாயிவிடுவதில்லை..

தவறுகளை பற்றி தவறு செய்பவர்களே சுட்டிக் காட்டும் வினோதங்கள் என்ன..?
மரியாதையை பற்றி மரியாதை தெரியாதவர்கள் பேசும் மாயங்கள் என்ன..?
உலகின் தவறுகளை ஒரு விரலால் சுட்டிக் காட்டும் மனிதா..!
அடக்கமாய் உனது தவறுகளை சுட்டிக் காட்டும் மற்ற விரல்களுக்கு பதிலென்ன மனிதா..!

மனசாட்சிகள் மயானங்களில் புதைக்கப் பட்டதோ..?
இல்லை மனசாட்சிகள் மலங்களாய் வெளியேறிப் போனதோ..?
மனிதா நீ எப்பொழுது மனிதனாய் வாழ்வாய்....!!!

Wednesday, January 11, 2012

பாரதம் உயிர்தெழட்டும்:

வேதங்களோ, பைபிளோ, குரானோ இல்லாத ஓரிடத்திற்கு மனித இனத்தை அழைத்து செல்ல நாம் விரும்புகிறோம். ஆனால் வேதங்களையும் பைபிளையும் குரானையும் சமரசப்படுத்துவதன் மூலம் இது செய்யப்பட வேண்டும். ஒருமை தத்துவமான ஒரே மதத்தின் பல்வேறு வெளிப்பாடுகளே உலக மதங்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற நெறியை தேர்ந்தெடுத்துக் கொள்ளவே இவ்வாறு பல மதங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மனித இனத்துக்கு போதிக்க வேண்டும். இந்து மதம், இஸ்லாம் ஆகிய இருபெரும் மதங்களின் சேர்க்கையே, அதாவது வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் நமது தாய் நாட்டிற்கு ஒரே நம்பிக்கை. எனவே வேதாந்த கொள்கைகள் எவ்வளவு நேர்த்தியாக, சிறப்பாக இருந்தாலும் செயல்முறை முகம்மதிய மதத்தின் உதவி இல்லாமல் மனித இனத்துக்கு சிறிதும் பயன் அற்றவையே. இந்த குழப்பத்தில் இருந்தும் போராட்டத்தில் இருந்தும் பெருமை பொருந்தியதாக, யாராலும் வெல்ல முடியாததாக, வேதாந்த மூளையுடனும் இஸ்லாமிய உடலுடனும் வருங்காலத்தின் இந்தியா எழுவதை என் மனக்கண்ணால் நான் காண்கிறேன்.

உலகப் பொருட்களின் ஒளியால் மதிமயங்கிக் கிடப்பவர்கள், உண்பது குடிப்பது போகங்களை அனுபவிப்பது இவற்றிற்காகத்தான் வாழ்கிறோம் என்று எண்ணுபவர்கள், மண்ணும் பொன்னும்தான் உடைமைகள் என்று நினைப்பவர்கள், இன்பம் என்றாலே புலன்களால் நுகரும் இன்பம் தான் என்று கருதுபவர்கள், பணம்தான் கடவுள் என்று நினைப்பவர்கள், சுலபமாகவும் வசதியாகவும் வாழ்ந்து விட்டு இறப்பதுதான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று எண்ணுபவர்கள், உயர்ந்த விசயங்களை பற்றி நினைக்காத மனம் கொண்டவர்கள், தங்கள் வாழ்க்கையை சூழ்ந்திருக்கின்ற புலனின்பப் பொருட்களை தவிர மேலானது ஒன்று இருக்கிறது என்று நினைத்து பார்க்காதவர்கள் - இவர்கள் இந்தியாவிற்கு போனால் என்ன காண்பார்கள்? எங்கு பார்த்தாலும் வறுமை, அழுக்கு, மூடநம்பிக்கை, இருட்டு, பயங்கரம் இவற்றைத்தான். ஏன்? ஏனெனில் அவர்களை பொறுத்தவரை நாகரிகம் என்றால் உடை, கல்வி, சமூக மரியாதை - இவைதான். மேலை நாடுகள் தங்கள் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு தங்களால் இயன்ற அளவு முயன்று உள்ளன.
இந்தியா வேறு வழியில் சென்றது. யாரையும் வெல்வதற்காக தங்கள் நாட்டின் எல்லைகளை தாண்டி செல்லாதவர்கள், பிறர் பொருளுக்கு ஆசைப்படாதவர்கள் உலக வரலாற்றிலேயே இந்தியர்கள் மட்டும்தான். அவர்களிடம் இருந்த ஒரே தவறு என்னவென்றால் அவர்களுடைய நிலங்கள் வளம் மிக்கவையாக இருந்தன, அவர்கள் மிகவும் உழைத்து பாடுபட்டு பணம் சம்பாதித்தனர். அது பிற நாட்டினர் அங்கு புகுந்து அவர்களை அழிக்கும்படி ஆசை காட்டியது போலாகிவிட்டது.மற்றவர்கள் தங்கள் நாட்டை அழித்தாலும், தங்களை காட்டுமிராண்டிகள் என்று அழைத்தாலும், அதை மனநிறைவாக அவர்கள் ஏற்று கொள்கின்றனர். பதிலாக உலகிற்கு கடவுளைப் பற்றிய தங்கள் காட்சிகளை அனுப்பவே விரும்புகின்றனர். மனித இயல்பின் ரகசியங்களை உலகிற்கு வெளிப்படுத்த விரும்புகின்றனர். உண்மை மனிதனை மறைத்துக் கொண்டிருக்கும் திரையை கிழிக்க விரும்புகின்றனர். ஏனெனில் அவர்கள் கனவை அறிந்தவர்கள். இந்த உலோகாயதத்திற்கு பின்னால் மனிதனின் உண்மையான தெய்வீக இயல்பு இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும். இந்த தெய்வீக இயல்பை எந்த பாவமும் மாசுபடுத்த முடியாது. எந்த குற்றமும் கெடுக்க முடியாது. எந்த ஆசையும் களங்கப் படுத்த முடியாது. தீ எரிக்க முடியாது. நீர் நனைக்க முடியாது. வெப்பம் உலர்த்த முடியாது. மரணம் கொல்ல முடியாது. மேலை நாட்டினருக்கு புலன்களால் அறியப்படுகின்ற புறப்பொருட்கள் எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, இந்தியருக்கு மனிதனின் உண்மையான இயல்பு.
இயற்கையை வெல்ல தான் மனிதன் பிறந்திருக்கிறான் உண்மை. இயற்கை என்பதை ஜடவுலகம் அல்லது புறப்பிரபஞ்சம் என்று மேலை நாட்டினர் கொள்கின்றனர். மலைகள், கடல்கள், நதிகள் என்று அளவற்ற சக்திகளையும், எல்லையற்ற மாறுபாடுகளையும் கொண்ட இயற்கை கம்பீரமானதுதான் . ஆனால் அதை விட கம்பீரமானது ஒன்று இருக்கிறது. அதுதான் மனிதனின் அக இயற்கை. இது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இவற்றை விட உயர்ந்தது. பூமியை விட ,ஏன் பௌதீகப் பிரபஞ்சத்தை விட உயர்ந்தது. நம் சிறிய வாழ்க்கைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. அது இன்னொரு துறை, அதனை நாம் ஆராய வேண்டும். மற்ற துறையில் மேலைநாட்டவர் சிறந்து விளங்குவது போல் இந்த துறையில் கீழைநாட்டவர் சிறந்து விளங்குகிறார்கள் .
ஆகவே ஆன்மீகத் துறையைச் சீரமைக்க வேண்டுமானால், அது கீழை நாடுகளிலிருந்துதான் வர வேண்டும் என்பது பொருத்தமே. அவ்வாறே கீழை நாட்டான் எந்திரங்கள் தயாரிப்பதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், அவன் மேலை நாட்டவரின் காலடியில் உட்கார்ந்து கற்றுக் கொள்ளவேண்டும் என்பதும் பொருத்தமே. மேலை நாட்டான் ஆன்மிகம், கடவுள், ஆன்மா, பிரபஞ்ச ரகசியமும் உட்பொருளும் - இவை பற்றியெல்லாம் அறிந்து கொள்ள விரும்பினால், அவன் கீழை நாட்டினரின் காலடியில் அமர்ந்து கற்க வேண்டும்.
ஆன்மீக ஞானம் ஒன்றினாலேயே நமது துன்பங்களை என்றென்றைக்குமாக ஒழிக்க முடியும். மற்ற எல்லா அறிவும் நமது தேவைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே நீக்கும். தேவைகளை எழுப்புகின்ற மூலகாரணத்தை ஆன்ம ஞானத்தால் மட்டுமே முற்றிலுமாக வேரறுக்க முடியும். உடல் வலிமையின் வெளிப்பாடுகள் மகத்தானவை. விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளிலும் எந்திரங்களிலும் காணப்படுகின்ற அறிவு வெளிப்பாடுகள் உன்னதமானவை. ஆனால் இவை எதுவும் ஆன்மீக சக்தியைவிட அதிக ஆற்றல் கொண்டவை அல்ல.
--சுவாமி விவேகனந்தர்...

Saturday, November 5, 2011

கூர்மையும் நேர்மையும்

இந்த பெரிய பிரபஞ்சத்தில் மனித இனத்தினுடைய பரிமாணம், தோற்றம், வளர்ச்சி, இயக்கம் எல்லாமே இயற்கையின் உச்சக்கட்டச் சிறப்புகள் ஆகும். மனித இனமானது இயற்கையின் சிறப்புமிக்க பொக்கிஷங்களை சேர்த்து வைத்திருக்கிற களஞ்சியம் ஆகும்.பன்னெடுங்காலமாக இயற்கையின் ஒவ்வொரு அதிசயமும் மனிதனுடைய கருமையத்தில் சுருக்கி இருப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.

வான் காந்தத்தையும், சீவ காந்தத்தையும் விளங்கிக் கொள்வதன் மூலம், ஒருவர் வாழ்க்கையின் எல்லா உண்மைகளையும், பிரபஞ்சத்தின் எல்லா இரகசியங்களையும் தெரிந்து கொள்ள முடியும். ஆறாவது அறிவில் கூர்மை, நேர்மை என்னும் இருவகை உயர் திறன்கள் உள்ளன. கூர்மை விஞ்ஞானமாகவும், நேர்மை தத்துவ ஞானமாகவும் திகழும். காந்த ஞானம் அறிவின் இரு திறன்களையும் வளர்க்கும்.

மனிதனுடைய மனத்தின் அடித்தளமாக உள்ள ஆன்மீக அறிவு வளத்தை நிறைவாகப் பெற முடியும். இந்த வகையில் ஒருவர், தான் உள்ளுணர்வாகப் பெற வேண்டிய பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல், உயிர்ச்சக்தி, காந்தம் இவற்றை உணர்ந்தால் அவரிடம் எப்பொழுதும் விஞ்ஞான அறிவு ஓங்குவதோடு தெய்வீகக் குணங்களாகிய அன்பும், கருணையும் மலர்ந்து அவருடைய வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும்.

-அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி

Friday, November 4, 2011

இறைநிலையுணர்ந்த அறிவு

பேரியக்க மண்டல தோற்றங்கள் அனைத்திலும் சிறந்ததோர் தெய்வீக கருவூலம் மனிதப்பிறப்பு. பிரம்மம் என்பதே தெய்வம் எனப்போற்றப்படுகிறது. அதுவே தான், இறைவெளியாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சுத்தவெளியாகும். இதுவே எல்லாம் வல்ல பேராற்றலாகும். இது எல்லையற்ற விரிவு நிலையுடைமையாக இருப்பதால் புலன்களுக்கு எட்டாத ஒன்றாக உள்ளது.
இது விரைவு, பருமன், காலம், தூரம் எனும் நான்கு கணக்குகளுக்கும் உட்படாதது. இம்மாபெரும் ஆற்றலிலிருந்து தான் பரமாணுவேனும் நுண்ணியக்க துகள் தோன்றியது. பரமாணுக்கள் பல இணைந்து அணுவாகவும், அணுக்கள் பல இணைந்து பேரணு, செல்கள், பல உருவத் தோற்றங்கள், வானுலவும் கோள்கள், உலகம் மீது வாழும் ஓரறிவுத் தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரையில் தொடரியக்கமான பரிமாணம் தான், "பிரம்மம்" எனும் பேராற்றலின் சரித்திரம்.
மனிதன் என்ற தோற்றமே, பிரம்மத்தின் ஆதி நிலையாகவுள்ள இறைவெளி முதற் பொருளாகவும், ஆறறிவு கொண்ட மனித மனமே இறுதியாகவும் உள்ளன. ஆதி முதல் அந்தம் வரையில் அனைத்தையும் இணைத்து ஒரே அகக்காட்சியாக காணக்கூடிய பேரறிவு தான் பிரம்மா ஞானமாகும். இத்தகைய அறிவுதான் இறைநிலையுணர்ந்த அறிவு. அதுவே தான், முடிவு நிலையான மனத்தின் ஊடுள்ள உட்பொருளான அறிவாகவும்,அவ்வறிவுதான் தானாகவும் இருக்கும் முழுமை நிலையுணர்ந்த தெளிவே பிரம்மஞானம் ஆகும்.

-அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி..

Thursday, November 3, 2011

ஐந்திணைப்புப் பண்பாடு

தற்சோதனை என்பது தன்னைப் பற்றி ஆராய்தல் என்று விளங்கும். தன்னைப் பற்றி சிந்தித்தல், தன குறையுணர்தல், தான் திருத்தம் பெற திட்டம் வகுத்தல், வகுத்த வழியே செயலாற்றி வெற்றி பெறுதல் என்பன எல்லாம் தற்சோதனை பயிற்சியில் அடங்கும்.
தற்சோதனையை நான்கு பிரிவுகளாக்கி ஒவ்வொன்றாய் பயிற்சி அளிக்கப்படுகிறது.
முதல் பயிற்சி:
நான் யார்? என்ற வினாவினை எழுப்பி விடை பெறுதலாகும்.

உடல், உயிர், அறிவு, மெய்ப்பொருள் என்ற நான்கும் இணைந்தே மனிதன் என்ற இயக்கமாக விளங்குகிறது.

இந்த நான்கு நிலைகளைப் பற்றி விளக்கத்தின் மூலமும், சிந்தனையின் மூலமும் உணர்ந்து கொள்வதே மெய்யுணர்வாகும்.

இரண்டாவது பயிற்சி:
எண்ணம், சொல், செயல் இவற்றை ஒழுங்குப்படுத்துவதாகும்.

தனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும் அறிவிற்கும் உடல் உணர்ச்சிக்கும் துன்பம் எழாத அளவிலும், முறையிலும் எண்ணம், சொல், செயல் மூன்றையும் பண்படுத்திப் பயன் பெறுதலாகும்.

மூன்றாவது பயிற்சி:
அறுகுண சீரமைப்பு :

பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு குணங்களையும்
நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, நேர் நிறை விளக்கம், மன்னிப்பு என்ற ஆறு குணங்களாக மாற்றும் பயிற்சி முறையே அறுகுண சீரமைப்பாகும்.

மனிதன் உணர்ச்சி வயப்படும்போதுதான் அவன் ஆறு தீய குணங்களாக மாறுகிறான். அறிவின் வயம் நின்ற மாறாத விழிப்பு நிலைப் பெற்றால் உணர்ச்சி வயமாக மாற வழியே இல்லை. மனித இனப் பண்பாட்டிற்கு அறுகுண சீரமைப்பு இன்றியமையாததாகும்.

நான்காவது பயிற்சி:
கவலை ஒழித்தல்:

அறியாமை, உணர்ச்சி வயமாதல், சோம்பேறித்தனம் இவற்றால் செயல் தவறுகளும், கணிப்பு தவறுகளும் ஏற்படுகின்றன.

இவைகளை எல்லாம் ஆராய்ந்து முறைப்படி எல்லா கவலைகளையும் ஒழித்து நலம் பெற வேண்டும்.


குண்டலினி யோகத்தால் விழிப்பு நிலை பெற்று தற்சோதனைப் பயிற்சி முறையால் மனத்தூய்மையும், வினைத்தூய்மையும் உண்டானால், அவற்றின் அடிப்படையில் ஒழுக்க உணர்வு, கடமை உணர்வு, மெய்ப்பொருள் உணர்வு என்ற மூன்றும் இயல்பாக வந்து விடும்.

இத்தகைய பண்பாட்டின் பயிற்சி முறையை "ஐந்திணைப்புப் பண்பாடு" என்று வழங்குகிறோம்.

- அருள் தந்தை வேதாத்ரி மகரிஷி.