தற்சோதனை என்பது தன்னைப் பற்றி ஆராய்தல் என்று விளங்கும். தன்னைப் பற்றி சிந்தித்தல், தன குறையுணர்தல், தான் திருத்தம் பெற திட்டம் வகுத்தல், வகுத்த வழியே செயலாற்றி வெற்றி பெறுதல் என்பன எல்லாம் தற்சோதனை பயிற்சியில் அடங்கும்.
தற்சோதனையை நான்கு பிரிவுகளாக்கி ஒவ்வொன்றாய் பயிற்சி அளிக்கப்படுகிறது.
முதல் பயிற்சி:
நான் யார்? என்ற வினாவினை எழுப்பி விடை பெறுதலாகும்.
உடல், உயிர், அறிவு, மெய்ப்பொருள் என்ற நான்கும் இணைந்தே மனிதன் என்ற இயக்கமாக விளங்குகிறது.
இந்த நான்கு நிலைகளைப் பற்றி விளக்கத்தின் மூலமும், சிந்தனையின் மூலமும் உணர்ந்து கொள்வதே மெய்யுணர்வாகும்.
இரண்டாவது பயிற்சி:
எண்ணம், சொல், செயல் இவற்றை ஒழுங்குப்படுத்துவதாகும்.
தனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும் அறிவிற்கும் உடல் உணர்ச்சிக்கும் துன்பம் எழாத அளவிலும், முறையிலும் எண்ணம், சொல், செயல் மூன்றையும் பண்படுத்திப் பயன் பெறுதலாகும்.
மூன்றாவது பயிற்சி:
அறுகுண சீரமைப்பு :
பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு குணங்களையும்
நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, நேர் நிறை விளக்கம், மன்னிப்பு என்ற ஆறு குணங்களாக மாற்றும் பயிற்சி முறையே அறுகுண சீரமைப்பாகும்.
மனிதன் உணர்ச்சி வயப்படும்போதுதான் அவன் ஆறு தீய குணங்களாக மாறுகிறான். அறிவின் வயம் நின்ற மாறாத விழிப்பு நிலைப் பெற்றால் உணர்ச்சி வயமாக மாற வழியே இல்லை. மனித இனப் பண்பாட்டிற்கு அறுகுண சீரமைப்பு இன்றியமையாததாகும்.
நான்காவது பயிற்சி:
கவலை ஒழித்தல்:
அறியாமை, உணர்ச்சி வயமாதல், சோம்பேறித்தனம் இவற்றால் செயல் தவறுகளும், கணிப்பு தவறுகளும் ஏற்படுகின்றன.
இவைகளை எல்லாம் ஆராய்ந்து முறைப்படி எல்லா கவலைகளையும் ஒழித்து நலம் பெற வேண்டும்.
குண்டலினி யோகத்தால் விழிப்பு நிலை பெற்று தற்சோதனைப் பயிற்சி முறையால் மனத்தூய்மையும், வினைத்தூய்மையும் உண்டானால், அவற்றின் அடிப்படையில் ஒழுக்க உணர்வு, கடமை உணர்வு, மெய்ப்பொருள் உணர்வு என்ற மூன்றும் இயல்பாக வந்து விடும்.
இத்தகைய பண்பாட்டின் பயிற்சி முறையை "ஐந்திணைப்புப் பண்பாடு" என்று வழங்குகிறோம்.
- அருள் தந்தை வேதாத்ரி மகரிஷி.
No comments:
Post a Comment