Friday, November 4, 2011

இறைநிலையுணர்ந்த அறிவு

பேரியக்க மண்டல தோற்றங்கள் அனைத்திலும் சிறந்ததோர் தெய்வீக கருவூலம் மனிதப்பிறப்பு. பிரம்மம் என்பதே தெய்வம் எனப்போற்றப்படுகிறது. அதுவே தான், இறைவெளியாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சுத்தவெளியாகும். இதுவே எல்லாம் வல்ல பேராற்றலாகும். இது எல்லையற்ற விரிவு நிலையுடைமையாக இருப்பதால் புலன்களுக்கு எட்டாத ஒன்றாக உள்ளது.
இது விரைவு, பருமன், காலம், தூரம் எனும் நான்கு கணக்குகளுக்கும் உட்படாதது. இம்மாபெரும் ஆற்றலிலிருந்து தான் பரமாணுவேனும் நுண்ணியக்க துகள் தோன்றியது. பரமாணுக்கள் பல இணைந்து அணுவாகவும், அணுக்கள் பல இணைந்து பேரணு, செல்கள், பல உருவத் தோற்றங்கள், வானுலவும் கோள்கள், உலகம் மீது வாழும் ஓரறிவுத் தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரையில் தொடரியக்கமான பரிமாணம் தான், "பிரம்மம்" எனும் பேராற்றலின் சரித்திரம்.
மனிதன் என்ற தோற்றமே, பிரம்மத்தின் ஆதி நிலையாகவுள்ள இறைவெளி முதற் பொருளாகவும், ஆறறிவு கொண்ட மனித மனமே இறுதியாகவும் உள்ளன. ஆதி முதல் அந்தம் வரையில் அனைத்தையும் இணைத்து ஒரே அகக்காட்சியாக காணக்கூடிய பேரறிவு தான் பிரம்மா ஞானமாகும். இத்தகைய அறிவுதான் இறைநிலையுணர்ந்த அறிவு. அதுவே தான், முடிவு நிலையான மனத்தின் ஊடுள்ள உட்பொருளான அறிவாகவும்,அவ்வறிவுதான் தானாகவும் இருக்கும் முழுமை நிலையுணர்ந்த தெளிவே பிரம்மஞானம் ஆகும்.

-அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி..

No comments:

Post a Comment